May 28, 2009

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்....

பதிவு எழுதாத இந்த சில நாட்களில் கூடுதலாக சில நல்லவர்கள் ஃபாலோவர்ஸா சேர்ந்திருக்காங்க,, என்ன சொல்லவர்ராங்கன்னு தான் தெரியல.. :)
----------------------------------------------------------
தென்னிந்தியா வந்தாச்சு.. சுண்டைக்காய் குழம்பு சாப்பிட்டாச்சு.. லிஸ்ட்ல ஒரு டிக் அடிச்சாச்சு..
அரைக்கீரை கூட்டு , அரைக்கீரை கடைசல் ,அரைக்கீரை பொரியல்ன்னு வகைக்கொன்று டிக் அடிச்சாச்சு..எதிர்பாராம பம்ப்ளிமாஸ் கூட கிடைச்சுச்சு ., பிரிச்சு சீனி போட்டு சாப்பிட்டாச்சு..பொரிஉருண்டை, நவாப்பழம் கூட ஆச்சு.. சின்னச்சின்ன வெள்ளரிப்பிஞ்சும் சாப்பிட்டாச்சு..  

---------------------------------------------------------
பக்த கோடிகளை அம்மன் அருள் பெற அழைக்கும் ஆட்டோக்களுடன் ஊர் (மாயவரம் என்னும் மயிலாடுதுறை ) இன்னமும் பழமையை மறக்காமல் இருக்கிறது.  கடைகளிலெல்லாம் ஒல்லிபிச்சான் சுடிதார் பெண்கள் பாவமாய் வேலை செய்கிறார்கள்.. பெண்கள் எல்லாம் இன்னமும் ஜல் ஜல் கொலுசுடன் நடக்கிறார்கள்.. குட்டிப்பிள்ளைய பின்னாடி கேரியரிலும் ஒயர் கூடையை ஹேண்ட்பாரிலும் வச்சிக்கிட்டு கடைக்கு போகும் அம்மாக்கள்.. இதெல்லாம் ஊருல ( தில்லியில்)  பார்க்கமுடியாதில்ல..:-)

 
பள்ளி கல்லூரித் தோழிகளின் அம்மா வீட்டிற்கு தொலைபேசி புது எண்களை வாங்கி வழக்கம்போல எல்லாரையும் நலம் விசாரிக்க தொடங்கியாயிற்று.. வழக்கம்போல அவர்களும் பக்கத்து ஊரில் இருக்கும் தோழிகள் எண்களை என்னிடமே வாங்கிக்கொண்டார்கள்.. அழைப்பார்களோ இல்லை மீண்டும் அடுத்தமுறை நான் வரும்வரை காத்திருந்து அவர்களின் நலம் விசாரித்துக்கொள்வார்களோ தெரியவில்லை... :)






பூம்புகார் பீச்சுக்கு போயிட்டு தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் சாப்பிடாமலா அதையும் டேஸ்ட் செய்தாச்சு..


கடற்கரையே இல்லை. பாறைகள் போட்ட இடம் வரை அலைகள் வந்து கொண்டிருந்தது. வெகுதூரம் நடந்து சென்று தான் கடற்கரை உள்ள கடலில் விளையாட முடிந்தது.. :( கடலம்மா இன்னும் எத்தனை நிலத்தை உணவாக்க இருக்கிறாளோ தெரியவில்லை..

May 14, 2009

என் வீட்டுத் தோட்டத்தில் ....

என் வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் நண்பர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்துக்கிறேன்.


ப்ரோமிலைட்ஸ் (Bromeliads)
யுபோர்பியா மிலி (Euphorbia milii )

இவங்க பதிவர் வின்சென்ட் பரிசாகத் தரும்போது ரொம்ப சின்னவங்களா இருந்தாங்க ... அதற்கப்பறம் அந்த குழந்தைகள் எப்படி இருக்காங்கன்னு வின்சென்ட் விசாரித்தபோது வளர்ந்துகிட்டே இருங்காங்க பத்திரமா இருக்காங்கன்னு சமாதானம் சொன்னேன்.. இப்பத்தான் அவருக்கும் இந்த குழந்தைகளின் வளர்ச்சியைக் காட்டறேன்.. வரும்போது மூன்று நான்கு இலைகளுடன் இருந்த இவங்க இப்ப நல்லா வளர்ந்திருக்காங்க.. பூ முழு சிவப்பாக இல்லாம மஞ்சள் பச்சை கலந்து இருக்கிறது.

அவ்வப்போது மாலி (தோட்டக்காரர்) வருவார் . உரங்கள் போட்டு கொஞ்சம் கவனிச்சிட்டு ப் போவார். என்னதான் நாம கவனிச்சாலும் இவங்களுக்கெல்லாம் ஒரு நல்ல டாக்டர் மாலி தான்.. அவருக்கு இந்த புது செடிகள் ஆச்சரியமாக இருந்தது. நல்ல உயர்ந்த வகை செடிகள் கவனம் என்று சொல்லிவிட்டுப் போனார். கொஞ்சமாக தண்ணீர் விட்டு அதிக வெயில் படாமல் வைங்க என்று சொல்லிச்சென்றார்.



கறிவேப்பிலை முதலில் சவலைப்பிள்ளையாக இருந்து இப்போது தான் நல்ல நிலைக்கு வந்திருக்காங்க.. பாக்க என்ன அழகு!!
மணிப்பிளாண்ட் அப்பப்ப டிரிம் செய்து பண்ணிரண்டு வருசமாக இளமையாவே இருக்கறவங்க இவங்க..
மணத்தக்காளி.. இவங்க ஒருத்தவங்களா வந்து பெரிய குடும்பமாகிட்டவங்க .. ஒரு செடியில் பழம் ஆரஞ்சாவும் ஒரு செடியில் கருப்பாவும் இருக்கும்.. திடீர்ன்னு பூச்சி வந்து இலைகள் சுருங்கிபோவாங்க.. திடீர்ன்னு நல்லா வளமாவும் இருப்பாங்க..


நந்தியாவட்டை ... இவங்க ஒல்லிப்பிச்சான் . தொட்டியில் வேர் போக இடமில்லாம இலை சிறுத்து இருக்காங்க. இந்த காலநிலையில் நல்லா பூகொடுக்கிறாங்க..

இது தவிரவும் துளசி இருக்காங்க , பன்னீர் ரோஸ் இருக்காங்க..செம்பருத்தி இருக்காங்க
கற்றாழை இருக்காங்க அவங்களை இன்னொரு நாளில் அறிமுகப்படுத்துகிறேன்.

ஒரு நாள் உங்கள் வீட்டுத்தோட்டத்தையும் சுத்திக்காட்டுங்களேன் எங்களுக்கு? :-)

May 4, 2009

தமிழுக்கு ஓட்டு போடுங்க - நான் ஆங்கிலத்துக்கு மாறிட்டேன்

முன்பே ஒரு பதிவில் ப்ளாக் ஆஃப் நோட் என்கிற ப்ளாக்கர் தேர்வுகளை நான் வாசிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்னால் ப்ளாக்கர் ப்ராடக்ஸ் க்கு ஐடியா குடுங்கன்னு ஒரு விசயம் டேஷ்போர்டில் கிடைச்சது. நானும் இரண்டு ஐடியாவை அங்கே போட்டு வைத்திருக்கிறேன். தமிழ் பதிவுகளை எத்தனை நாள் தான் தமிழ்மண சூடான இடுகையில் மட்டும் படிக்கிறது போராக இருக்கிறது. அதனால் ப்ளாக்கர் தேர்வுகளிலும் பார்க்க ஆசை. மேலும் வேர்ட் ப்ரஸ் போல தமிழ் பதிவுகளின் அப்டேட் பகுதியும் கேட்டிருக்கிறேன். கவனித்ததில் பதிவர் மயூரேசன் மற்றும் செந்தழல் ரவியும் அங்கே பதிந்திருக்கிறார்கள்.. தமிழ் என்று தேடினால் அவர்கள் ஐடியாக்களைக் காணலாம். ஓட்டு ம் போடுங்க.. என் ஐடியாக்களுக்களுக்கு சென்று ஓட்டு போடுங்க மக்களே.. அங்கேயும் சில நல்ல உள்ளங்கள் எதிர்மறை ஓட்டுக்கள் போட்டிருக்கிறார்கள்.. :)

பதிவர் போட்டோக்ராபி மற்றும் வலை உதவி தீபா வும் ஐடியா சேத்திருக்காங்க
இப்படியாக நான் ஆங்கில பதிவுகளை எட்டிப்பார்க்கையில் அங்கேயும் பின்னுட்டமிட , அவர்கள் என் தமிழ்பெயரை படிக்கமுடியாமல் திணறுவதால் என் பெயரை மீண்டும் மாற்றிவிட்டேன். போனமுறை பெயர் மாற்றிய போது சென்ஷி எனக்கு பல பெயர் வடிவங்களை முன்பே பரிந்துரைத்திருந்தாலும் நான் புதுமாதிரியாக மாற்றியிருக்கிறேன் என்று மிக்க பெருமிதம் கொள்கிறேன்.

இனி என் பின்னூட்டங்கள் முத்துலெட்சுமி/muthuletchumi என்று வரும்.


டிஸ்கி : இனி பெயரை மாற்றமாட்டேன் என்ற உறுதியை எப்போதும் தரவில்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.