July 23, 2014

ஓவியத்தின் வழி கைப்பற்றுதல்






 
ஒரு ஓவியத்தின் வழி
கைப்பற்றும் வழியறிதல்
இக்கணத்தின் தேவை

சற்றே விலகிய பொழுதின்
விலையறிந்து
கண்ணிமை எண்ணியழைத்து
எச்சரித்து
கரம் பற்றிக்கொண்ட நினைவை 
நிகழ்வாக்கும் 
மற்றுமொரு 
அத்தினம் தேவை.
-----------------------------------------
 
வாயில் மாற்றி வைத்த
அவ்விடம் தேடி
வெகுதொலைவு நடந்தபோதும்
 துணையற்று திரும்பியபோதிருந்ததும்
ஒன்றல்ல
பாதங்கள் புதைய மணலற்ற
அப்பாதையின்
ஒற்றைச்சருகுமற்ற தன்மை
எழுப்பிய செயற்கையொலியால்
என் மணலை
என் சருகுகளை
அள்ளிக்கொண்டு
கருமை பரப்பி திசை திருப்புவதாய்
நிழலின் மென்மைக்கும்
புதுச்சாயம்

------------------------------------


காலச்சுழல் 
விரிகிறதா சுருங்குகிறதா 
நொடிகளின் ஒலி
எச்சரிக்கையா 
அமைதியின் எதிரொலியா
நெருங்குவது 
ஓய்வா 
முடிவற்ற தேடலா








------------------------------------------------------------


இன்றென ஒவ்வொன்றாய்
வெற்றிடம் நிரப்பவென்றும்
எனைச்சார்ந்தவை என்றே
உரிமை கொண்டும்
வந்தவை எல்லாம்
அரணுடைக்க முடியாமல்
நிரப்பவியலாமல்
மிகச்சரியான வெற்றிடமென்று
ஏதுமில்லை என்றபடி
ஒன்றாய்
வழி திரும்பிக்கொண்டிருக்கின்றன 


-------------------------------------------


 
நட்சத்திரங்களையும் வானையும்
சமைக்கப்படாத
தங்கள் பாதைகளை
தாங்களே அறியும் பறவைகளையும்
உண்டாக்கும் போதே
தனக்காய்
வனங்களை நிழல்களை
உருவாக்குவாள்
சக்தி













------------------------------------------------
ஒவ்வொன்றாய் எடுத்து
பார்வைக்கு அடுக்கியபின்
விழியற்றவர்களின்
வருகை மட்டுமே
உறுதி செய்யப்பட்டதாய் அறிகிறேன்


நீங்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றேதான்
இருந்தும் கடக்கிறீர்கள்
விழியற்றும்
இதோ ஒவ்வொன்றையும் 
பிழையற்று அறிந்துநிற்கின்றன
மனங்கள் 

No comments: